திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை - கிராமமே திரண்டு வந்து காப்பாற்றி உதவி! - சொறிப்பாறைப்பட்டி ஜல்லிக்கட்டு
திண்டுக்கல்:நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி, சங்கரன்பாறையில் முத்துமாரியம்மன், பாலமுருகன் கோவில் திருவிழாவை
முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை கோட்டாட்சியர் பிரேம்குமார் தொடங்கி வைத்தார். பாரம்பரிய முறைப்படி முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. பின் ஒவ்வொரு காளைகளாக வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன.
இந்த ஜல்லிக்கட்டு விழாவில் திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, திருச்சி, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 500 காளைகளும் 150 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு உரிய மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடிய காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு வெள்ளி காசுகள், சைக்கிள், பீரோ, சேர், கட்டில், மெத்தை, சைக்கிள், அண்டா, டிவி ஸ்டாண்ட் உள்ளிட்டப் பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு விழாவில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள் 19 பேரும், பார்வையாளர்கள் 8 பேரும் என மொத்தம் 27 பேரும் காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக 5 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவரது காளை அருகே உள்ள தனியார் தோட்டத்தின் கிணற்றில் விழுந்தது. இந்த தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினரும், பொதுமக்களும் கிணற்றில் நீரில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காளையை லாவகமாக உயிருடன் மீட்டனர்.