வைக்கோல் குடோனில் பயங்கர தீ விபத்து; கரும்புகை மண்டலமாக காட்சியளித்த குடியிருப்புகள்!
சென்னை:புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில் வைக்கோல் குடோன் இயங்கி வருகிறது. இந்த வைக்கோல் குடோனில் வைக்கோல் மட்டுமல்லாமல் இறைச்சி வெட்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் பழைய மற்றும் புதிய இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வைக்கோல் குடோனில் தீ பற்றி எரிந்துள்ளது. மேலும் வைக்கோல் குடோனில் உள்ள பொருட்களிலும் தீ பற்றிப் பரவியதால் புளியந்தோப்பு, ஆடுதொட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
இதனை அடுத்து வைக்கோல் குடோனை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகியதால் கரும்புகை சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளிலிருந்து அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தீயணைப்புத் துறையினர் மின்சாரத்தைத் துண்டித்து அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
மேலும் வியாசர்பாடி, புளியந்தோப்பு, வேப்பேரி ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று வைக்கோல் குடோனுக்கு முன் மற்றும் பின் இரு பக்கங்களிலும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்துத் தீயணைப்புத் துறையினர், வைக்கோல் குடோனில் உள்ள இயந்திரங்களால் அதிக அளவு தீ பரவி எரிவதாகவும், வைக்கோல் குடோனுக்கு அருகே கட்டப்பட்டு வைத்திருந்த இரண்டு கால்நடைகள் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர். மேலும், இந்த வைக்கோல் குடோனில் ஊழியர்களோ, ஆட்களோ யாரும் இல்லை எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகே உள்ள குடியிருப்பு பகுதி மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று விட்டதாகவும் தெரிவித்தனர்.