Coimbatore: வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து - நடந்தது என்ன?
கோவை:காந்திபுரம் அடுத்த கிராஸ் கட் சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் பிரபல வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனம், உணவகம், செல்போன் விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் உணவகத்தின் கட்டடத்தில் சில சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. அப்போது கேஸ் வெல்டிங் பணி செய்யும்போது, அதில் இருந்து வெளியான தீப்பொறி அருகில் மூன்றாவது தளத்தில் செல்போன் கடையின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த ஏ.சி இயந்திரத்தில் பட்டு, விபத்து ஏற்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை, பிரபல வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை நிறுவனம் அருகே வைத்து இருந்த அட்டைப் பெட்டிகள் மீது பட்டு தீ வேகமாகப் பரவியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் புகை மூட்டம் கிளம்பியது. அதனைத் தொடர்ந்து, அங்கு இருந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் இரண்டு வாகனங்கள் மூலம் விரைந்து வந்துள்ளனர்.
தீ மேலும் பரவாமல் அதைக் கட்டுப்படுத்தி பெரும் சேதத்தை தவிர்த்தனர். தீ விபத்தால் ஏ.சி. இயந்திரங்கள் மற்றும் அங்கு வைக்கப்பட்டு இருந்த அட்டைப் பெட்டிகள் உள்ளிட்டவை முழுவதும் எரிந்து சேதம் அடைந்தன. கட்டடத்தின் அருகே அடுத்தடுத்து கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், துரிதமாக செயல்பட்டு தீயணைப்புத் துறையினர், தீயை பரவவிடாமல் அணைத்ததால் பெரும் சேதம் ஏற்படுவதில் இருந்து தவிர்க்கப்பட்டது.