நெல்லையில் பெண் கைதிக்கு கரோனா.. பதற்றத்தில் தச்சநல்லூர் காவல் நிலையம்! - Thachanallur Police Station
திருநெல்வேலி:நெல்லை மாநகர காவல் சரக்கத்திற்குட்பட்ட தச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற வழக்கில் தொடர்புடைய பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க மருத்துவ நடைமுறைகளின் படி உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கரோனா பரிசோதனையும் எடுக்கப்பட்டது.
உடல் பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட பெண் கைதியின் கரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைக் கேட்டு அதிர்சியடைந்த காவலர்கள் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனிடையே நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் பெண் கைதியை ஆஜர்படுத்த அழைத்துச்சென்ற தச்சநல்லூர் போலீசாருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து நேற்று மாலை தச்சநல்லூர் காவல் நிலையம் முழுவதும் மாநகராட்சி நிர்வாகத்தினரால் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
தொற்று பாதிக்கப்பட்ட கைதியின் வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தற்போது அவர் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளார். மேலும் விசாரணை கைதிக்கு கரோனா தொற்று பரவியுள்ள சம்பவம் மாநகர காவல்துறையினரிடையே பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. தற்போது விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் கிளைச்சிறையிலும் இதேபோல் கைதிகளுக்கு கரோனா பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.