தேனி ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீர் - விவசாய நிலங்களுக்குச் செல்ல முடியாமல் விவசாயிகள் அவதி! - கிராமப்புற செய்திகள்
Published : Nov 10, 2023, 6:46 PM IST
தேனி:போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சிநாயக்கன்பட்டியில், விவசாயத்தையே பிரதான தொழிலாக அப்பகுதி மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பல ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு தற்போது விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று விவசாயம் மேற்கொள்வதற்கு, ரயில்வே சுரங்கப்பாதை வழியாகத் தான் செல்லவேண்டும். இதைத் தவிர்த்து, நான்கு கி.மீ சுற்றிச் சென்றுதான், விவசாய நிலங்களை அடைய வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகத் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, மஞ்சுநாயக்கன்பட்டி ரயில்வே சுரங்கப்பாதையில், மழை நீர் முழுவதும் தேங்கி குளம் போல் காட்சியளிக்கின்றது. இதனால், விவசாய நிலங்கள் மழை நீரில் மூழ்கி, பயிர்களும் சேதமடைந்து வருகின்றன.
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாகச் சுரங்கப்பாதையில் தேங்கியிருக்கும் மழை நீரால், விவசாய பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், மழைக்காலங்களில் தொடர்ந்து இதுபோன்ற நிலைமை ஏற்படுவதால், சுரங்கப்பாதையிலுள்ள மழை நீரை அகற்றி விவசாயம் செய்வதற்கான வழிவகை செய்ய வேண்டும் என்பதே, அப்பகுதி மக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.