ஒட்டன்சத்திரம் அருகே விவசாயிகள் பூசாரி போல் வேடம் அணிந்து போராட்டம்! - ottanchathiram protest
திண்டுக்கல்:ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தம், சீக்காவலசு, அப்பியம்பட்டி, நால்ரோடு, தும்பிசிபாளையம் ஆகிய பகுதிகளில் இருக்கும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர். பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறிப்பாக நல்லதங்காள் அணை கட்டுவதற்காக விவசாயிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட இடத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்தும், கண்வலி விதைக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். இதே போல, ஒட்டன்சத்திரம் முதல் கோவை வரை அமைக்கப்பட்டு வரும் உயர் மின் கோபுரத்தினால் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதால் அப்பணிகளை நிரந்தரமாக நிறுத்த கோரியும் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனரும் வழக்கறிஞருமான ஈசன் முருகசாமி, போராட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் வடிவேலு, மற்றும் மாவட்ட அமைப்பு செயலாளர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், போராட்டத்தில் கோஷங்களை எழுப்பி கோயில் பூசாரி போல் வேடம் அணிந்து சாமிகிட்ட பணம் கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சுற்றுவட்டார விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.