ஊட்டி மலை ரயில் பாதையில் உலா வந்த யானை.. வனத்துறையினர் திணறல்! - nilagiri news
நீலகிரி: குன்னூர் பரலியார் பகுதியில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால் மீண்டும் யானைகள் கூட்டம் மலையேறத் துவங்கியுள்ளது. இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 12வது மற்றும் 13வது கொண்டை ஊசி வளைவு அருகே மலை ரயில் பாதையில் ஒற்றை காட்டு யானை உலா வந்தது.
அதனை வனத்துறையினர் விரட்டச் சென்றபோது வனத்துறையினரைக் காட்டு யானை திருப்பி விரட்டியது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் இரு புறமும் நிறுத்தப்பட்டுக் காட்டு யானை சாலை கடந்து செல்ல வனத்துறை வழிவகை செய்தனர். பின்பு நீண்ட நேரம் போராடி வனத்துறையினர் யானையைக் காட்டுப் பகுதிக்கு விரட்டினர்.
மேலும் காட்டு யானைகளைக் கண்டவுடன் அருகே சென்று நின்று வீடியோ பதிவு செய்வதே, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஓட்டுநர்களும் பொதுமக்களும் ஈடுபட வேண்டாம் எனவும், சாலையில் செல்லும் வாகனங்கள் அதிக ஒலி எழுப்ப வேண்டாம் எனவும், யானைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினரால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.