சோலோவாக உலா வரும் ஒற்றைக் காட்டு யானை..! பீதியில் மக்கள்! - வனத்துறை
Published : Oct 9, 2023, 9:38 AM IST
கோயம்புத்தூர்: வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் பகுதியில் பகல் நேரங்களில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று உலா வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட சோலையார் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை அருகில் சாலையைக் கடந்து பகல் நேரங்களில் ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பகல் நேரங்களில் கூட வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் காலை நேரங்களில் நடைபயணம் மற்றும் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்பவர்களை யானை துரத்துவதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் கடும் பயத்தில் ஆழ்ந்து உள்ளனர். தற்போது கடந்த 4 நாட்களாக அப்பகுதியில் உள்ள பலா மற்றும் வாழை, சத்துணவுக் கூடங்கள், நியாய விலைக் கடை உள்ளிட்டவைகளை யானை சேதப்படுத்தி வருவதாக புகார் எழுந்து உள்ளது. ஆகையால் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றைக் காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.