பலாப்பழத்திற்காக படையெடுக்கும் யானைகள்.. சோதனைச்சாவடி சமையலறை சேதம்..! - nilgiri elephant attack
நீலகிரி: பலாப்பழம் சீசன் தற்பொழுது துவங்கியுள்ளதால் காட்டு பகுதியில் உள்ள யானைகள் பலாப்பழத்தை உண்பதற்காக சமவெளியை நோக்கி படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள கெத்தைப் பகுதியில் இருந்து ஐந்து காட்டு யானைகள் மூப்பர் காடு, மாணார், பழனியப்பா மற்றும் சுல்தானா பகுதிகளுக்கு தற்போது வந்துள்ளது.
இந்த காட்டு யானைகள் கொலக்கம்பை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணார், பழனியப்பா சாலையில் உள்ள சோதனை சாவடியானது கேரளா மாநிலம் அட்டப்பாடி அகழி, முள்ளி பகுதியில் இருந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க அமைக்கப்பட்டதாகும்.
இந்நிலையில் நேற்றைய முன் தினம் (ஜூலை 27) இரவு கெத்தைப் பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் சோதனை சாவடியின் கீழ் தளத்தில் உள்ள சமையல் அறை கதவை உடைத்து அரிசி மற்றும் பொருள்களை சேதப்படுத்தி உள்ளன. அப்போது பணியில் இருந்த காவலர்கள் அச்சத்தில் உறைந்தனர்.
ஏற்கனவே பலமுறை இந்த சோதனை சாவடி பகுதிக்கு யானைகள் வந்துள்ளதால் சோதனைச் சாவடியின் வலது புறம் உள்ள ஜன்னல் கம்பிகள் அகற்றப்பட்டு ஏணியும் வைக்கப்பட்டுள்ளது. இது, காட்டு யானைகள் அப்பகுதிக்கு வந்தால் காவலர்கள் கம்பிகள் அகற்றி ஜன்னல் வழியாக ஏணி மூலம் சோதனை சாவடியின் மேல் பகுதிக்கு செல்லும் வகையில் பாதுகாப்பு கருதி கம்பிகள் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.