ஸ்வீட்னா யாருக்குத்தான் பிடிக்காது.. லாரியை மறித்து கரும்பை ருசித்த யானை! - சாம்ராஜ் நகர்
ஈரோடு மாவட்டம்சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்து உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் பகல் நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம்.
இந்த நிலையில், ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் செம்மண் திட்டு என்ற இடத்தில் சாலையில் நடமாடிக் கொண்டிருந்தது. அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் செல்வதற்காக சாலையில் வந்து கொண்டிருந்தது.
அதைக் கண்ட காட்டு யானை லாரியை வழி மறித்து, லாரியில் இருந்த கரும்புத் துண்டுகளை தும்பிக்கையால் எடுத்து ருசித்தது. சுமார் அரை மணி நேரம் காட்டு யானை லாரியை வழி மறித்து நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வயிறு முட்ட கரும்பு தின்ற காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது.