பழனி கோயில் மின் இழுவை ரயிலில் புதிய ஏசி பெட்டிகள் இணைப்பு.. பயன்பாட்டுக்கு வருவது எப்போது? - palani temple winch online booking
Published : Aug 29, 2023, 2:27 PM IST
திண்டுக்கல்:பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதில் மாற்றுத்திறனாளி பக்தர்கள், முதியவர்கள், குழந்தைகள் எளிதாக மலை மீது சென்று சாமி தரிசனம் செய்துவர கோயில் நிர்வாகம் மின் இழுவை ரயில்(palani temple winch) மற்றும் ரோப் கார் சேவையை இயக்கி வருகிறது.
மின் இழுவை ரயில் நிலையத்தில் இருந்து மூன்று மின் இழுவை ரயில்கள் இயக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 30 நபர்கள் வரை அமர்ந்து பயணம் செய்யும் வகையில் இந்த மின் இழுவை ரயிலில் பெட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த ஜனவரி மாதம் புதிதாக 75 பேர் அமர்ந்து செல்லும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மின் இழுவை ரயில் பெட்டியை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரும், பழனி கோயில் அறங்காவலர் குழு தலைவருமான சந்திரமோகன் நன்கொடையாக கோயில் நிர்வாகத்திற்கு வழங்கினார்.
புதிய பெட்டியை மூன்றாவது மின் இழுவை ரயிலில் பொருத்தும் பணியில் கோயில் ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டனர். தற்போது பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், மின் இழுவை ரயில் சோதனை ஓட்டம் செய்து வருகின்றனர்.
புதிய மின் இழுவை ரயில் பெட்டி சோதனை ஓட்டம் நிறைவு செய்து, வல்லுநர் குழுவிடம் பாதுகாப்பு தர சான்றிதழ் பெற்ற பிறகு பக்தர்கள் வசதிக்காக விரைவில் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.