மழை இல்லாததால் கருகிய பயிருடன் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வந்த விவசாயிகளால் பரபரப்பு! - கடலூர் மாவட்ட ஆட்சியர்
Published : Oct 30, 2023, 11:13 PM IST
கடலூர்: திட்டக்குடி, வேப்பூர் சிறுபாக்கம், நெங்குடுளம், சிறுமுளை, ரெட்டாகுறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 40 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. பயிர்கள் நன்கு வளர்ந்து வந்ததால் இந்தாண்டு நல்ல வருமானம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.
விவசாயிகளின் இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக மங்களூர் பகுதியில் இதுவரை பருவமழை பெய்யவில்லை. இதனால், சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்கள் தற்போது தண்ணீரின்றி கருகி வருவதால், விவசாயிகள் கவலை அட்டைந்து உள்ளனர். மேலும் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சிய சில நிலங்களில் படைப் புழு தாக்குதல் அதிகமாக உள்ளதால் விளைச்சல் இன்றி பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து கருகிய மக்காச்சோள பயிருடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (அக்.30) வந்த விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் கருகிய பயிரையும், படைப்புழு தாக்குதலால் சேதம் அடைந்த பயிரையும் காண்பித்து வருந்தினர்.
மானாவாரி விவசாயிகளான நாங்கள் மழையை நம்பியே வங்கியில் கடன் பெற்று, நகைகளை அடகு வைத்து 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்திருந்தோம். ஆனால், பயிர்கள் முற்றிலும் அழிந்து பெரும் நஷ்டத்தில் உள்ளதால் வேளாண்துறை அதிகாரிகள் பயிர் பாதிப்புகளைப் பார்வையிட்டு கணக்கெடுக்க வேண்டும் எனவும் இதற்கு விரைவில் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: சுற்றுலாவின்போது வழி தவறிய உ.பி மூதாட்டி.. உறவினர்களுடன் சேர்த்த கடலூர் போலீசார்!