மிக்ஜாம் புயல்; கோடம்பாக்கம் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர்! - Kodambakkam Traffic
Published : Dec 5, 2023, 1:15 PM IST
சென்னை:மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று முழுவதும் பெய்த மழையால் பல பகுதிகளில் ஆங்காங்கே வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று பெய்த மழையால் கோடம்பாக்கம் துரைசாமி சாலை, கோடம்பாக்கம் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீரானது தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் கூட நகர முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்புக்காக தங்களின் கார்களை மேம்பாலங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், மழை நீரை அகற்றும் பணியினை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கோடம்பாக்கத்தில் உள்ள வீடுகளின் கீழ் தளத்தில் மூன்றடுக்குக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து குளம் போல் தேங்கி காட்சி அளிப்பதோடு, நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.