காலாண்டுத் தேர்வு விடுமுறை; கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - crowd at kodaikanal
Published : Sep 30, 2023, 5:09 PM IST
திண்டுக்கல்:காலாண்டுத் தேர்வு விடுமுறை காரணமாக மக்கள் கூட்டம் சுற்றுலாத்தலங்களை நோக்கி படை எடுத்து வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
பிரதான சுற்றுலா இடங்களான மோயர் சதுக்கம், குணா குகை, தூண்பாறை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட பல்வேறு தலங்களில் மாறி வரும் காலநிலை மற்றும் குளிர்ந்த சூழலை அனுபவித்தும், மேகக் கூட்டங்களுக்கு நடுவே புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளதால் வத்தலகுண்டு பிரதான சாலை, அப்சர்வேட்டரி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பல மணி நேரம் வாகனத்திலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.