கோவை விழா 2024: கோவை மக்களுக்கு டபுள் டக்கர் பேருந்து அறிமுகம் செய்து அசத்தல்..! - coimbatore vizha 2023
Published : Dec 24, 2023, 8:44 PM IST
கோயம்புத்தூர்: இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூர் போன்ற இடங்களில் டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை பாலங்கள் அதிகளவில் கட்டப்பட்டு வந்ததால் இந்த டபுள் டக்கர் பேருந்து சேவையானது 2008ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பொதுமக்களை மகிழ்விக்கும் விதமாக டபுள் டக்கர் பேருந்தைக் கோயம்புத்தூர் விழாவில் மீண்டும் அறிமுகம் செய்தனர். இந்த ஆண்டு 16வது பதிப்பாகத் துவங்கியுள்ள கோவை விழாவில் இரண்டு டபுள் டக்கர் பேருந்துகளை அறிமுகம் செய்துள்ளனர். இதனைக் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்துத் துவக்கி வைத்தனர்.
இதுகுறித்து கோயம்புத்தூர் விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், கோயம்புத்தூர் நகரின் பெருமைகளைக் கொண்டாடும் வகையில் கோயம்புத்தூர் விழா அமைப்பாளர்கள் சார்பில் டபுள் டக்கர் பேருந்து மூலம் கோவை நகரைப் பொதுமக்கள் சுற்றிப் பார்க்கக் கொண்டு வந்துள்ளோம்.
இன்று டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை பொதுமக்கள் இலவசமாகப் பயணம் செய்யவும், பிரத்தியேக மொபைல் செயலி மூலம் பயணத்தை முன்பதிவு செய்யலாம் எனவும் இந்த பஸ் வ.உ.சி பார்க் கேட்டில் இருந்து புறப்பட்டு முக்கிய சாலை வழியாகச் சென்று சுமார் 6-7 கிமீ வரை இந்த பேருந்து இயக்கப்பட்டு மீண்டும் கிளம்பிய இடத்திற்கு வந்து சேரும்” என தெரிவித்தனர்.