வீட்டின் படிக்கட்டில் வைத்திருந்த செல்போனை கவ்விச் சென்ற நாய்.. வைரலாகும் வீடியோ! - viral video
Published : Jan 12, 2024, 4:35 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மனோ. இவர் நேற்று (ஜன.11) உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சி சென்று விட்டு இரவு 7 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், தனது செல்போனை வீட்டின் படிக்கட்டில் வைத்துக் குளிக்கச் சென்றுள்ளார். பின் திரும்பி வந்து படிக்கட்டில் பார்க்கையில் அவரது செல்போன் அவ்விடத்தில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பிறகு, பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதன் காரணத்தால் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைச் சோதனை செய்துள்ளார். அதில், ஒரு நாய் வந்து படிக்கட்டின் மீது வைத்திருந்த செல்போனை கவ்விச் சென்றது தெரிய வந்தது.
அதன் பின்னர், நாய் சென்ற வழியாக சென்று பார்த்த போது குப்பை கொட்டும் இடத்தில் செல்போனை போட்டுவிட்டுச் சென்றுள்ளது என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், வீட்டின் படிக்கட்டில் வைத்திருந்த செல்போனை நாய் ஒன்று கவ்விச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.