புதுச்சேரியில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திமுகவினர்..பின்னணி என்ன..? - Puducherry AIADMK
Published : Jan 4, 2024, 8:09 AM IST
புதுச்சேரி:புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து, நேற்று (ஜன.3) புதுச்சேரி ஒதியன் சாலை காவல் நிலையத்தை முற்றுகைட்டு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அனிபால் கென்னடி உள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுவன் பாதாள சாக்கடையில் விழுந்தது சம்பந்தமாக விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், சம்பந்தப்பட்டவர் மாற்றுத்திறனாளி என்று தெரிந்தவுடன் அவரின் மனம் புண்படும் வகையில் இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒதியன் சாலை காவல் நிலையத்தில் அனிபால் கென்னடி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகார் அளித்து 15 தினங்கள் ஆகியும் அந்த புகாரின் மீது இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவருகிறது. இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத ஒதியன் சாலை போலீசாரை கண்டித்து, சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களான திமுகவினர் ஏராளமானோர் ஒதியன் சாலை காவல் நிலையத்தை நேற்று திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் தொகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு போலீசாரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்க மறுத்த திமுகவினர், காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இதனால், காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய போலீசார், அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் திமுகவினர் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த திமுக மகளிர் அணி செயலாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் கூறும்போது, 'சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, காது கேளாத மாற்றுத்திறனாளி என்று தெரிந்தும் அவரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அன்பழகன் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளார்.