விஜயகாந்த் நலம் பெற வேண்டி தேமுதிக தொண்டர்கள் சார்பில் ஆயூஷ் யாகம்..! - ஸ்ரீ அமிர்தாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திரசேகரீஸ்வரர்
Published : Dec 7, 2023, 5:43 PM IST
திருவண்ணாமலை:ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ அமிர்தாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திரசேகரீஸ்வரர் என்ற கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் தேமுதிக சார்பில், மாவட்ட துணை செயலாளர் பாஸ்ரகன் ஏற்பாட்டில் இன்று (டிச.07) ஆயூஷ் யாகம் நடைபெற்றது.
இந்த யாகமானது தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டியும், ஆயுள் அதிகரிக்க வேண்டியும் நடத்தப்பட்டுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராகத் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் சரவணன் பங்கேற்றார். மேலும், தீராத வியாதிகளைத் தீர்க்கும் எந்திர வடிவம் கொண்ட ஸ்ரீ வினைதீர்க்கும் காமாட்சி அம்மன் கோயில் மண்டபத்தில், யாகசாலை அமைத்து மஞ்சள், குங்குமம், பன்னீர் பட்டுப்புடவை உள்ளிட்ட 501 மூலிகைகள் மற்றும் மங்கள பொருட்கள் கொண்டு இந்த சிறப்பு யாகம் செய்யப்பட்டது.
இந்த ஆயுஷ் யாகத்தைத் தொடர்ந்து ஸ்ரீ சந்திரசேகரீஸ்வரர் மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதையடுத்து விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.