இயக்குநர் ஹரியின் தந்தை உடல் சொந்த ஊரில் தகனம்! - thoothukudi latest news
Published : Oct 22, 2023, 9:30 PM IST
தூத்துக்குடி:திரைப்பட பிரபல இயக்குநர் ஹரியின் தந்தை உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கச்சனாவிளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழில் முன்னணி இயக்குநரில் ஒருவராக வலம் வருபவர், இயக்குநர் ஹரி. இவரின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷணன் (88), சென்னையில் நேற்று (அக்.21) காலமானார். சிறிது காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று காலை காலமானார். அவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
அவரது உடல் நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் திரையுலகினர் அஞ்சலிக்காக நேற்று பிற்பகல் 2 மணி வரை வைக்கப்பட்டிருந்தது.பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான திருச்செந்தூர் அருகேயுள்ள கச்சனாவிளைக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு இயக்குநர் ஹரியின் மாமனாரும், பிரபல நடிகருமான விஜயகுமார், நடிகர் அருண் விஜய், தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.பின்னர் மேள, தாளங்கள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.