திருவண்ணாமலை கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்! - tiruvannamalai temple
திருவண்ணாமலை:நினைத்தாலே முக்தி தரும் சிவ பக்தர்களால் போற்றப்படுவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இக்கோயிலில் கால பைரவர் சன்னதி அருகே பிரம்ம தீர்த்த குளம், ஆயிரங்கால் மண்டபம் எதிரே சிவகங்கை தீர்த்த குளம் என இரு புண்ணிய குளங்கள் அமைந்துள்ளன. இந்த இரண்டு தீர்த்த குளங்களிலும் கெண்டை, ரோகு, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் மற்றும் வாத்துகள் கோயில் நிர்வாகத்தால் வளர்க்கப்பட்டு வருகிறது.
கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 தினங்களாகவே வெயிலின் தாக்கமானது அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருக்கோயில் பிரம்ம தீர்த்த குளத்தில் வளர்க்கப்பட்டு வரும் மீன்கள் கோடை வெயிலின் தாக்கத்தால் கடந்த 4 தினங்களாகத் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன.
மேலும், பிரம்ம தீர்த்த குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் கோயிலில் துர்நாற்றம் வீசியது. இதனால் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததை ஏற்று இறந்த மீன்களை அகற்றும் பணியில், தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:உலகளவில் பிரபலமாகும் சேலம் ஜவ்வரிசி... மத்திய அரசு அளித்த அங்கீகாரம்!