பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா.. பூக்குழி இறங்க அலைமோதிய பக்தர்கள் கூட்டம்! - ஈரோடு மாவட்ட செய்தி
ஈரோடு: தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா மார்ச் 20ஆம் தேதி கோலாகலமாகத் துவங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் கோவிலில் அம்மன் புகழ் பாடும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. விழாவையொட்டி கோவில் முகப்புப் பகுதி மின்னொளியில் ஜொலித்தது.
பக்தர்கள் வழங்கிய வேம்பு, ஊஞ்சல் போன்ற மரத்துண்டுகளைக் கொண்டு வார்க்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்குவதற்கு பல்வேறு மாவட்டத்திலிருந்து பக்தர்கள் வருகை புரிந்தனர். அதிகாலை தெப்பக்குளத்தில் இருந்து மேள தாளத்துடன் பூசாரி ராஜசேகர் குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டார். குண்டத்தில் மலர்கள் தூவியும், கற்பூரம் ஏற்றியும் சிறப்புப் பூஜைகள் செய்து குண்டத்தில் பூசாரி ராஜசேகர் குண்டம் இறங்கினார்.
அவரைத் தொடர்ந்து பிற பூசாரிகள், மத்தள மேள இசைக்கலைஞர்கள் குண்டம் இறங்கினர். இதனையடுத்து பெண்கள், குழந்தைகள் அதிகாரிகள் என ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கினர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் முதலில் குண்டத்தில் ஒரு வரிசையாக அனுமதிக்கப்பட்ட பக்தர்கள், இரு வரிசையாக அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி நேராக அம்மனை தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவி கர்ப்பம்.. சாக்கு மூட்டையில் சடலம்.. ஈரோடு இளைஞர் செய்த பகீர் சம்பவம்!