ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் துவக்கம்..! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி! - Nilgiri hills train travel
Published : Dec 1, 2023, 1:36 PM IST
நீலகிரி:மண் சரிவு காரணமாக நிறுத்தப்பட்ட குன்னூர் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்று (டிச.01) முதல் மீண்டும் தொடங்கியது. இதில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பயணம் மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த வட கிழக்கு பருவமழை காரணமாக, பல இடங்களில் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோன்று மலை ரயில் பாதை அமைந்துள்ள பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்து ரயில் தண்டவாளம் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, சேதமடைந்த மலை ரயில் பாதைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூர்- மேட்டுப்பாளையம் மற்றும் உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சேதமடைந்த ரயில் தண்டவாளங்களின் சீரமைக்கும் பணிகள் முடிவுற்ற நிலையில், இன்று உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கியது. பல நாட்களுக்குப் பிறகு மலை ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்டனர்.