கோவை மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளியில் திடீர் ஆய்வு.. காலை உணவை சாப்பிட்டு பாடம் எடுத்து மகிழ்ச்சி!
Published : Sep 8, 2023, 7:49 PM IST
கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த பட்டக்காரன் புதூர் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய வகுப்பறைகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள சமையலறைக்கு சென்று ஆட்சியர், மாணவர்களுக்காக தயார் செய்த உணவு வகைகளை ஆய்வு செய்தார். மேலும், சாப்பாட்டை வாங்கி சுவைத்து பார்த்த ஆட்சியர் மாணவர்களுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது. சாம்பாரில் என்னென்ன காய்கறிகள் போடப்படுகிறது என அங்கிருந்த சத்துணவு பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் அங்கிருந்து பள்ளி வகுப்பறைக்கு சென்ற ஆட்சியர், மாணவர்கள் கலந்துரையாடினார். அப்போது புத்தகத்தைப் பார்த்து மாணவர்கள் பாடம் நடத்திய ஆட்சியர், அவர்களிடம் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்வின் போது அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், உட்பட பலர் உடன் இருந்தனர்.
முன்னதாக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.