சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய துர்கா ஸ்டாலின்! - Durga Stalin palkudam
Published : Dec 4, 2023, 9:00 AM IST
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. நவகிரகங்களின் புதன் ஸ்தலமாக விளங்கக்கூடிய இக்கோயிலில் அகோர முகம் கொண்ட சிவபெருமான் அகோர மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாளித்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அன்று அகோர மூர்த்திக்கு பால் அபிஷேக திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நான்கு வீதிகளில் வலம் வந்து பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி, தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் கார்த்திகை மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று (டிச.3) நடைபெற்ற பால்குட திருவிழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செய்தார். மேலும் கோயிலின் உள்பிரகாரத்தில் பால் குடத்துடன் சுற்றி வலம் வந்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.
மேலும், இந்த பால்குட திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.