சி.ஐ.டி.யூ சார்பில் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை - thiruvallur recent news in tamil
திருவள்ளுர்:திருவள்ளுர் அடுத்த நேமம் பகுதியில் உள்ள சாக்லேட் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரியும், தொழிற்சங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வெளிநாட்டு கம்பெனி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சிஐடியூ சார்பில் தொழிலாளர்கள், தனது குடும்பத்துடன் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் நேமம் பகுதியில் அமைந்துள்ள தனியார் சாக்லேட் பிஸ்கெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் சுமார் 60 நிரந்தரத் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், நிரந்தர தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் 5 பேரை நிர்வாகம் பணி நீக்கம் செய்து தொழிற்சாலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனைக் கண்டித்து சக தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரியும், ஊதிய உயர்வு வழங்கக் கோரியும் பணி புறக்கணிப்பு செய்து கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று (ஜூன் 13) தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, வெளிநாட்டு தொழிற்சாலை நிர்வாகம், இந்திய தொழிற்சங்க சட்டத்தை மதிக்காமல், தொழிற்சங்க நிர்வாகிகளை பணி நீக்கம் செய்ததாகவும், இவர்களை மீண்டும் பணியமர்த்தக் கோரி நிரந்தர தொழிலாளர்களும் தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் நிலையில், வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியும், மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், வெளிநாட்டில் முதலீடு ஈர்க்க செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய தொழிற்சங்கம் சட்டத்தை மதிக்காமல் இருப்பவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட முடியாது என்று தெரிவித்திருப்பதாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இது போன்ற தொழிற்சாலை பிரச்னைகளை பேசி தீர்த்ததுபோல், திருவள்ளூர் ஆட்சியரும் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.