வேலூர் அரசு பென்ட்லேண்ட் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை - முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்! - வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன்
Published : Aug 22, 2023, 1:38 PM IST
வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை ஆங்கிலேயர் காலத்தில் சிறிய அளவில் துவங்கப்பட்டு, பின்னர் மருத்துவமனையாக தரம் உயர்ந்தது. பின்னர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டதால், இடவசதி கருதி மருத்துவமனை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
இதனால் பென்ட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து, பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. ரூ.197 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன், பென்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்தார். ஏழு தளங்களைக் கொண்டதாக அமைக்கப்பட உள்ள இந்த மருத்துவமனை நாள்தோறும் சுமார் ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் அளவிற்கு அமைக்கப்பட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். வேலூர் மாநகரம் மட்டுமல்லாமல் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த மருத்துவமனையின் மூலம் பயனடைய உள்ளார்கள்.