தியாகிகள் புகைப்படம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - சிசிடிவி காட்சி வெளியீடு! - Thoothukudi crime news
தூத்துக்குடி:ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட மீனாட்சிபட்டி பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றனர். இங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகில் தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவப் படங்கள் பீடம் அமைத்து நிறுவப்பட்டுள்ளது. இந்த திருவுருவ படங்கள், நேற்று இரவு (ஜூலை 9) அடையாளம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இன்று (ஜூலை 10) காலை ஸ்ரீவைகுண்டம் - தூத்துக்குடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஶ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன், ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து பின்னர் காவல் துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முதற்கட்டமாக அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் நான்கு இருசக்கர வாகனங்களில் வந்த எட்டு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், சமுதாய போர்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் எட்டு பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.