ஆட்டோவில் வந்து ஆவின் பாலை அபேஸ் செய்த கொள்ளையர்கள் - வைரலாகும் வீடியோ!
Published : Oct 23, 2023, 9:21 PM IST
கடலூர்:கடலூரில் பல்வேறு பகுதிகளிலும் ஆவின் பால் பூத்துகள் உள்ளன. இந்த பூத்துகளில் அதிகாலை 12 மணி அளவில் வரும் பால் ஏஜென்ட்கள், அந்தந்த கடை வாசலிலேயே அவர்களுக்குத் தேவையான பால் டிரேவை அடுக்கி விட்டுச் சென்று விடுவர்.
அதன் பின்னர், கடை உரிமையாளர்கள் காலையில் வந்து கடையைத் திறந்து பால் விற்பனையைப் பார்ப்பர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாகக் கடலூர் செம்மண்டலம், மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என பல்வேறு பகுதிகளிலும், இதுபோன்று வைக்கப்படும் பால் டிரேக்கள் பாலுடன் காணாமல் போனதாக புகார் வந்த வண்ணம் இருந்துள்ளது.
இதனால் உஷாரான கடலூர் வண்ணாரபாளையம் பகுதியில் இயங்கி வரும் ஆவின் பால் கடை உரிமையாளர், தனது கடையில் பால் டிரே வைக்கப்படும் பகுதியில் கண்காணிப்பு கேமராவை வைத்துள்ளார். இதனை அறியாத திருடர்கள், இன்று அதிகாலை (அக்.23) ஆட்டோவில் வந்து நான்கு பால் டிரேவை எடுத்துச் செல்லும் காட்சி அதில் பதிவாகி உள்ளது.
இதனையடுத்து, இந்த காட்சிகளை வைத்து தற்போது கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில், ஆவின் பால் ஏஜென்ட் புகார் கொடுத்துள்ளார். ஏறத்தாழ ஒவ்வொரு ட்ரேவிலும் 12 லிட்டர் பால் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிசிடிவி காட்சிகளுடன் ஆவின் பால் கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.