CCTV:Vellore Theft Case: கோயிலின் உண்டியலைத் தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்!
வேலூர்(Vellore): வேலூர் மாவட்டம், சித்தேரி பகுதியில் மகாசக்தி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு அப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராம மக்கள் வந்து வழிபடுவது வழக்கம். பல குடும்பங்களுக்கு இந்தக் கோவில் குலதெய்வ கோவிலாகவும் இருந்து வருகிறது.
மேலும் திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோயிலில் உள்ள மாரியம்மனுக்கு, சிறப்பு வழிபாடு செய்து விழாக்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்வார்கள். இப்படிப் புகழ் வாய்ந்த இந்த கோயிலில் இன்று (ஜூலை 16) அதிகாலை இந்த கோயிலில் புகுந்த திருடர்கள்(Thieves), இரண்டு பேர் முகத்தைத் துணியால் மூடிக்கொண்டு கோவிலில் உள்ள உண்டியலைப் பெயர்த்துத் தூக்கிச் சென்றுள்ளனர்.
கோவிலுக்கு இன்று காலையில் வழக்கம்போல வந்த பூசாரிகள் உண்டியல் திருடப்பட்ட சம்பவத்தை அறிந்து, அரியூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். இதனை அடுத்து காவல் துறையினர் உடனடியாக மகாசக்தி மாரியம்மன் கோயிலுக்குச்சென்று, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து விசாரணையின் ஒருகட்டமாக, அந்த மர்ம கொள்ளையர்கள் தூக்கிச்சென்ற உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, காலி உண்டியலை ரயில்வே தண்டவாளம் அருகே வீசி விட்டுச்சென்றுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் கோயிலில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாய் வைத்து விசாரணை மேற்கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.