சிறுமியை முட்டி பந்தாடிய மாடு; நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்! - அரும்பாக்கம் போலீசார்
சென்னை:சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ஹர்சின் பானுவின் மகள் ஆயிஷா (வயது 9) எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று (ஆகஸ்ட் 9) வழக்கம் போல பள்ளியை விட்டு தாய் ஹர்சின் பானு அவரது இரு மகள்களையும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி ஆர் பிளாக் இளங்கோ தெரு வழியாக நடந்து சென்ற போது அவ்வழியாக 7 மாடுகள் சென்ற நிலையில், அதில் ஒரு மாடு திடீரென சிறுமி ஆயிஷாவை கொம்பால் குத்தி தூக்கி வீசியது. பின்னர் கீழே விழுந்த சிறுமியை மாடு விடாமல் குத்திய நிலையில் அருகிலிருந்தோர் கூச்சலிட்டு கற்களை மாடு மீது வீசி காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அதை பொருட்படுத்தாத மாடு சிறுமியை குத்தி தூக்கிய நிலையில் இருந்த போது பிரம்பால் மாட்டை அடித்து துரத்தி உள்ளனர். உடனே மாடு முட்டி காயமடைந்த சிறுமி ஆயிஷாவை அவரது தாய் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சாலையில் அஜாக்கிரதையாக மாடுகளை அழைத்து சென்ற உரிமையாளர் அரும்பாக்கத்தை சேர்ந்த விவேக் (வயது 26) மீது அரும்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் சென்ற சிறுமியை மாடு குத்தி பந்தாடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.