பிரதமர் மோடி படத்தை அவமதிப்பு செய்த காங்கிரஸ் நிர்வாகிகள் 25 பேர் மீது வழக்கு!
தென்காசி:ராகுல் காந்தி பதவி பறிப்பை எதிர்த்து தென்காசியில் நடைபெற்ற சாலை மறியலின்போது பிரதமர் மோடியின் படத்தை அவமதிப்பு செய்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து பதவி பறிப்புக்குத் தடை விதிக்கக் கோரி ராகுல் காந்தி தாக்கல் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று தென்காசி மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் முன்பு, கடந்த ஜூலை 7ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் படத்தில் காலணி கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தென்காசி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் மாடசாமி சோதிடர், கடையம் யூனியன் கவுன்சிலர் மாரிக்குமார் உள்ளிட்ட 25 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:Tiruchendur: திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!