திடீரென தீ பிடித்து எரிந்த கார்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்! - தீ பிடித்து எரிந்த கார்
செங்கல்பட்டு:மேல்மருவத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பல் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் சேலையூர் பகுதியைச் சேர்ந்த ராஜா அசோக், இவருடைய தாய் சித்ரா, தங்கை கிரிஜா மற்றும் மைத்துனர் ஆகாஷ் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், கார் ஒன்றில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்குச் சென்றனர்.
அவர்கள் குடும்பத்துடன் மீண்டும் சென்னை திரும்பி மேல்மருவத்தூர் அருகே வந்து கொண்டிருந்த போது காரில் இருந்து புகை வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஓட்டுநர் காரை நிறுத்தி சோதனை இட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனே அவர் காரில் இருந்தவர்களை இறங்குமாறு கூறிவிட்டு, அவரும் காரில் இருந்து விலகி சென்றார்.
சிறிது நேரத்தில் கார் முழுமையாகக் கொளுந்துவிட்டு எரியத் துவங்கியது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.