மணத்துடன் மனதைக் கவரும் மகர வண்ண லில்லி மலர்கள்.. சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்வு..
திண்டுக்கல்:கொடைக்கானல் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று இயற்கையின் அழகை ரசித்து செல்கின்றனர்.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக பிரையண்ட் பூங்கா (Bryant Park) இருந்து வருகிறது. இந்த பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல லட்சம் மலர்கள் நடவு செய்யப்பட்டு தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு கால நிலைக்கு ஏற்ப பூக்கள் நடவு செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு சில பூக்கள் பூத்துக் குலுங்கி சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகர வண்ண லில்லி மலர்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த வகை மலர்கள் பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்கி வருகிறது. இந்த வகை மலர்கள் பூத்துக் குலுங்குவதை சுற்றுலா பயணிகள் பலரும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் கடந்து செல்கின்றனர்.
இதனை தொடர்ந்து இனிவரும் காலங்களில் சால்வியா, ஹைட்ரோன்சியா உள்ளிட்ட பல்வேறு மலர்கள் பூத்துக் குலுங்கும் எனவும், இரண்டாம் சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் எனவும் தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.