தவறி விழுந்த செல்போன்.. கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - nellai tenkasi highway accident
தென்காசி மாவட்டம் ஆலங்குளம், ஆண்டிப்பட்டி விலக்கு அருகே நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலையில் தென்காசி நோக்கி இருவர் பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, அவர்களின் செல்போன் தவறி சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. அதனை எடுப்பதற்காக பைக்கில் வந்தவர்கள் சாலையோரம் திடீரென பைக்கை நிறுத்தி உள்ளனர்.
அந்த நேரத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த ஆட்டோவும், காரும் அடுத்தடுத்து பிரேக் போட்டு நிறுத்தி உள்ளனர். அப்போது நெல்லையிலிருந்து தென்காசி நோக்கி பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து முன்னாள் சென்ற ஆட்டோ மற்றும் கார் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென வலது பக்கம் சாலையில் திருப்ப முயன்றபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் கேரளாவிலிருந்து ஆலங்குளத்திற்கு கனிம வளங்கள் ஏற்றீச் சென்ற கனரக லாரி மீது பேருந்து நேருக்கு நேர் மோதி உள்ளது.
இந்த விபத்தில் அரசுப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் சேர்மக்கணியும், லாரி டிரைவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை. அதேநேரம், பேருந்தின் முன் பக்க கண்ணாடிகள் அனைத்தும் நொறுங்கி விழுந்ததோடு, லாரியின் முன்பக்கமும் சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில், அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.