மதுரை எம்.பி-யை கடுமையாக சாடி, பாஜகவினர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு..! - madurai news
Published : Dec 26, 2023, 10:42 PM IST
மதுரை: திமுக-பாஜக இடையே அண்மைக் காலமாக பலதரப்பட்ட கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்களைக் கண்டிக்கும் வகையில் பல்வேறு கருத்து பதிவுகளைத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், மதுரை மாநகர் மாவட்டம் பாஜக மீனவர் பிரிவு சார்பாக மதுரை தல்லாகுளம் உள்ளிட்ட மதுரையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சு.வெங்கடேசனுக்கு எதிராகக் கண்டன சுவரொட்டியை ஒட்டியுள்ளனர். அதிலும் குறிப்பாக அந்த சுவரொட்டியில், "திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளை இணைப்பதற்குப் பணம் கொடுத்தது உண்மைதான் என்று முதல்வர் கூறியது பொய்யா?" என குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், "சமூக நீதி போர்வையில் ஒளிந்திருக்கும் தொடர் போலி பிரச்சாரம் செய்யும் சுருட்டல் வெங்கடேசன்-MPஐ வன்மையாகக் கண்டிக்கிறோம்" எனவும் "மதுரை மக்களுக்கு நாடாளுமன்றத்தில் உன் குரல் என்ன? மதுரை மக்கள் மன்றத்தில் உன் நலத்திட்டங்கள் எங்கே? எம்.பி பதவி உனக்கு ஒரு கேடா? வாக்களித்தவர்களுக்கு வாய்க்கரிசியா?" என்ற கடுமையான வாசகங்கள் அந்த சுவரொட்டியில் இடம் பெற்றுள்ளன.
மதுரை மாநகர் மாவட்ட பாஜக மீனவர் பிரிவு சார்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்., சு.வெங்கடேசன் கண்டித்து ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.