"கலைஞர் நூற்றாண்டு" விழா.. கின்னஸ் உலக சாதனை படைத்த பரத நாட்டிய கலைஞர்கள்..! - Sadhguru Sangeet Dance
Published : Jan 8, 2024, 3:32 PM IST
தேனி:முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கம்பம் சத்குரு சங்கீத நாட்டிய வித்யாலயா சார்பில், 11 ஆயிரம் பரத நாட்டிய கலைஞர்கள் ஒன்றாக இணைந்து, பரதம் ஆடி புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கம்பம் சத்குரு சங்கீத நாட்டிய வித்யாலயா சார்பில், தேனியில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சென்னை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட நாட்டியப் பள்ளிகளில் இருந்து 11 ஆயிரம் பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர்.
இதில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சாதனைகளை கூறும் வகையில், இயற்றப்பட்ட பாடலுக்கு ஏற்றவாறு மாணவிகள் பரதம் ஆடி அசத்தினர். இதனை, லன்டனில் உள்ள கின்னஸ் உலக சாதனை அமைப்பு (world record union) அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது. இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன், உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் குருமார்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.