குன்னூரில் கரடிகள் நடமாட்டம்:கூண்டு வைத்துப் பிடிக்க கோரிக்கை - coonoor policestatuion
நீலகிரி:குன்னூர் அருகே உள்ள சேலாஸ் கெந்தலா, பாரதி நகர், பில்லிமலை போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதானால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று(ஜூன் 18) இரவு சேலாஸ் பஜார் பகுதியில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், கரடி சுற்றி திரிவதை வீடியோவாகப் பதிவு செய்தனர்.
இதற்கு இடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பில்லி மலைப் பகுதியில் கரடி ஒன்றினை குன்னூர் வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து உள்ளனர். பின்னர், பிடிபட்ட அந்த கரடி முதுமலை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதைப்போல, கடந்த சில நாட்களாக சேலாஸ் கெந்தளா, பாரதி நகர் பகுதியில் கரடிகள் சுற்றித் திரிகின்றன. ஆகையால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கரடிகளைக் கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்னூர் பகுதியில் பகல் மற்றும் இரவு வேளைகளில் சுற்றித் திரியும் கரடிகளால் குன்னூர் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குன்னூர் பகுதி வன விலங்குகள் அதிகம் இருக்கும் இடமாகும். காட்டு எருமைகள், கரடி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புலி எனப் பல வகையான வனவிலங்குகள் அதிகம் காணப்படும் பகுதியாகும்.
இப்பகுதிகளில் கரடிகள் அடிக்கடி காட்டுப்பகுதியில் இருந்து வந்து ஊர்ப் பகுதிகளிலும், ரோட்டிலும் சுற்றித் திரியும். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். அதேபோல், பாரதி நகர்ப் பகுதியில் பகல் வேளையில் சாலையில் உலா வந்த கரடியை அப்பகுதி சிறுவர்கள் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தற்போது வைரலாகப் பரவி வருகின்றது. அங்கு வந்த நாய்கள் கரடியைச் சுற்றி வளைத்து துரத்த முற்பட்டது. ஆனால், இதை சிறிதும் கண்டு கொள்ளாத கரடி அங்கிருந்து குப்பைத்தொட்டிக்குச் சென்று உணவுப் பொருட்களைத் தேட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
இதையும் படிங்க:5தலைமுறை.. 85 உறுப்பினர்கள்.. 100-ஆவது பிறந்தநாள் கொண்டாடிய சீனியம்மாள் பாட்டி!