இரவில் வாக்கிங் செல்லும் கரடி! நெல்லை மக்கள் பீதி - bear enter into residential area
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி ஒன்று சுற்றித் திரிவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் கரடியை விரைந்து புடிக்க வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளன. இந்த வன விலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி மலை அடிவாரத்தில் உள்ள விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் புகுந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் தற்போது இரவு நேரங்களில் சிவந்திபுரம் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று நடமாடுவது குறித்து வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஊர் மலையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் இந்த ஊருக்குள் கரடி எவ்வாறு வந்தது என பொதுமக்கள் மத்தியல் ஆச்சரியத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே தென்காசி மாவட்டம் கடையம் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரடி கொடூரமாக தாக்கியதில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். எனவே ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஃபிடே உலக கோப்பை செஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா!