பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்.. வீடியோ வைரல்! - today news
சென்னை: சைதாப்பேட்டையில் மேளதாளங்கள் முழங்க பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது தொடர்பான வீடியோவை, சமூக வலைதளத்தில் நண்பர்கள் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சமீப காலமாக பிறந்தநாளை பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டி கொண்டாடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு கத்தி வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுபவர்களை காவல் துறையினரும் கைது செய்து வருகின்றனர். ஆனால், இந்த கேக் கலாச்சாரம் தமிழ்நாடு முழுவதும் பரவி வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை காவேரி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜீவா. இவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு சாலையின் நடுவே இருசக்கர வாகனத்தை நிறுத்தி சுமார் 30க்கும் மேற்பட்ட நண்பர்கள் புடைசூழ மேளதாளங்களோடு பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதேபோல ரவுடி பினு என்ற நபர் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடும்போது போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.