Bastille Day: பிரான்ஸ் தேசிய தினம்: பட்டாசு வெடித்ததில் வேடிக்கை பார்த்தவர்கள் காயம்! - etv bharat tamil
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் நேற்று (ஜூலை 14) உலகம் முழுவதும் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதேபோல் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் வண்ணமயமான வான வேடிக்கை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கடற்கரை பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற விண்ணைப் பிளந்த வான வேடிக்கை நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கண்டுகளித்தனர். இதனிடையே அந்த வான வேடிக்கையின்போது கடற்கரையில் ஏராளமான பொதுமக்களும் வேடிக்கை பார்த்தனர். அப்போது எதிர்பாரத விதமாக வெடியில் இருந்து நெருப்புத் துகள்கள் பட்டு சிலர் காயம் அடைந்தனர்.
அதிக காயமடைந்த புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பிரஞ்சுத்துறை மாணவர்கள் ஓம்கார் (21), பூர்ணா(22), உப்பளம் கணபதி (38) ஆகியோர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் வெளிப்புற நோய் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் காவல் துறை தரப்பில் கேட்டதற்கு, வான வேடிக்கையின்போது சுமார் 6 பேர் காயமடைந்தனர் என்றும், அதில் சிறு தீக்காயம் ஏற்பட்ட 3 பேர் மட்டுமே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என்றும் தெரிவித்தனர்.