சென்னை தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்.. வாகனங்கள் செல்லத் தடை!
Published : Nov 29, 2023, 4:50 PM IST
சென்னை: தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ந்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், தாம்பரம் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால், முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதோடு, தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, செம்பாக்கம், சேலையூர், பெருங்களத்தூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதியில் இன்று (நவ.29) காலையி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், தாம்பரம் பகுதியில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதில் வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாம்பரம் ரயில்வே சுரங்க பாதையில் முற்றிலுமாக மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சுரங்க பாதையை கடந்து செல்ல முடியத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ரயில்வே சுரங்க பாதையில் தேங்கி இருக்கும் மழை நீரை மின்மோட்டார் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இந்த சுரங்கப்பாதை வழியாக கடந்து செல்ல வாகன ஓட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.