Bannari temple: பண்ணாரி கோயிலில் பாரம்பரிய நடனமாடிய படுகர் இன மக்கள்! - Bannari temple
ஈரோடு :சத்தியமங்கலம் அடுத்த அடர் வனப்பகுதியில் உள்ள பண்ணாரி அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாகும். இங்கு தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்து வருகின்றனர். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி கோட்டாடை மற்றும் ஒசட்டி மலைக் கிராமங்களைச் சேர்ந்த படுகர் இன மக்கள் பண்ணாரி அம்மன் கோயிலில் பாரம்பரிய நடனமாடி அம்மனை வழிபடுவது வழக்கம். அதேபோல் நடப்பாண்டும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வந்த படுகர் இனத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கோயில் வளாகத்தில் மேளதாள இசைக்கு ஏற்ப தங்களது பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.
ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் என வித்தியாசம் பாராமல் நடனமாடி படுகர் இன மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். படுகர் இன மக்களின் நடன காட்சியைக் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் கண்டு மகிழ்ந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று பண்ணாரி அம்மன் கோயிலில் படுகர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடி அம்மனை வழிபடுவதால் மன நிறைவு ஏற்படுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.