உலக தாய்ப்பால் வாரம்: நடனமாடி உற்சாகப்படுத்திய செவிலியர்கள்! - today news
கோயம்புத்தூர்:ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை உலகம் முழுவதும் உலக தாய்ப்பால் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் உலக தாய்ப்பால் வாரம் முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்றைய தினம் கோவையில் INNER WHEEL CLUB நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். கோவை ESI மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவை IWC, கோவை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு IWC, கோவை சினெர்ஜியின் IWC உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டு மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம், அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் இந்நிகழ்வில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்தான பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கினர். அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தாய்ப்பால் வாரம் குறித்தும் தாய்ப்பாலின் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர். இந்நிகழ்வில் மருத்துவமனை செவிலியர்கள் சினிமா பாடல்களுக்கு நடனமாடி உற்சாகப்படுத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.