"ஹெல்மெட் போட்டு போங்கடா" - நடுரோட்டில் சாமியாடி நூதன விழிப்புணர்வு!
தஞ்சாவூர்:தஞ்சையில் கடந்த 26-ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தினமும் போக்குவரத்து போலீசார் வாகனத் தணிக்கை மேற்கொண்டு ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஆசிரியர் ஜெயலட்சுமி மற்றும் நாட்டுப்புறக் கலைகளை ஆராய்ச்சி செய்து வரும் சேகர் என்பவரும் தீச்சட்டி ஏந்தி சாமி ஆடி அருள்வாக்கு கூறுவது போல் நடித்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், குடிபோதையில் வாகனம் ஓட்டக் கூடாது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த காட்சிகளை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் கண்டு ரசித்தனர். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் போக்குவரத்து காவலர் ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.