நெடுஞ்சாலை நடுவே சடலத்தை எரித்த மக்கள்.. திருவள்ளூரில் நடந்தது என்ன?
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் மக்கள் யாரேனும் உயிரிழந்தால் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்காகப் பல தலைமுறைகளாக அப்பகுதியில் உள்ள சுடுகாட்டைப் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், தற்பொழுது நெமிலிச்சேரி - திருப்பதி இடையே சுமார் 364 கோடி செலவில் அமைக்கப்படும் 6 வழிச்சாலை பணிக்காக எடுக்கப்பட்டு நெடுஞ்சாலை பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டின் இடமும் கையகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
காக்களூர் பகுதியில் வசிக்கும் மக்கள் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களை நல்லடக்கம் செய்வதற்குச் சுடுகாடு இல்லை எனவும் இதுவரை நெடுஞ்சாலைத் துறையும், தமிழ்நாடு அரசும் மாற்று இடத்தை ஒதுக்கவில்லை எனத் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், நேற்று அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் உயிரிழந்தார்.
அவரது சடலத்தை ஊர் மக்கள் ஊர்வலமாகக் கொண்டு சென்று நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் சாலையின் நடுவில் வைத்து எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று இடம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்த தரப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்துச் சென்றனர்.
இதையும் படிங்க: "நீதிபதி நாக்கை அறுப்போம்" - காங். மாவட்ட தலைவர் மீது வழக்கு!