பேட், பால் உடன் விராட் கோலி மணல் சிற்பம்.. பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்! - odi world cup
Published : Nov 5, 2023, 8:19 PM IST
ஒடிசா: ஐசிசி உலகக் கோப்பை தொடரின் 37வது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. 50 ஓவர்கள் முடிவில் 326 ரன்கள் குவித்தது. இதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்டரான விராட் கோலி சதம் விளாசி அசத்தினார்.
இதற்கிடையே விராட் கோலி தனது 35வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதற்கு முன்னால் வீரர்கள், ரசிகர்கள் என பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் இவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில், விராட் கோலி மணல் சிற்பத்தை வரைந்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் நாட்டில் அரங்கேறும் முக்கிய நிகழ்வுகளைப் பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களைச் செதுக்கி மக்களைக் கவர்ந்து வருகிறார். இந்த வகையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்திய அணியின் நட்சத்திர பேட்டரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலிக்கு தனது சிற்பத்தின் மூலம் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இவர் வரைந்த இந்த மணல் சிற்பத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விராட் கோலி இதுவரை விளையாடிய 111 டெஸ்ட் போட்டிகளில் தலா 29 சதம் மற்றும் அரைசதங்களுடன் 8676 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் 289 ஒருநாள் போட்டிகளில் 49 சதம், 70 அரைசதங்கள் உட்பட 13,626 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். மேலும், 115 டி20 போட்டிகளில் 1 சதம் மற்றும் 37 அரைசதங்களுடன் 4008 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:IND Vs SA: பர்த்டே நாளில் சச்சினின் உலக சாதனையை சமன் செய்த விராட்.. தென் ஆப்பிரிக்காவுக்கு 327 ரன்கள் இலக்கு!