திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகம்! - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்
Published : Oct 29, 2023, 7:06 AM IST
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமைந்துள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடபெற்றது.
அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் அமைந்துள்ள மூலவருக்கு 50 கிலோ அரிசி, கேரட், பீன்ஸ் வாழைக்காய், தக்காளி, வெண்டைக்காய், கோஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளைக் கொண்டு சுவாமிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, அன்னாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இறைவனை அன்ன ரூபமாகக் கொண்டு உலகத்தில் உள்ள அனைத்து ஜீவன்களும் பசிப்பிணி இல்லாமல், நோய் நொடி இல்லாமல் மக்கள் எப்போதும் பஞ்சம் இல்லாமல் வாழ்வதற்கு அன்னாபிஷேகம் நடத்துவதாக கருதப்படுகிறது. சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றுக்கு மேலாக கருதப்படுவது, அன்னாபிஷேகம்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் பௌர்ணமியன்று ஆகம முறைப்படி அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.