திமுக உள்பட அனைத்து கட்சியினரும் வெளிநடப்பு.. சின்னமனூர் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு - Theni news
தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் நகராட்சி மொத்தம் 27 வார்டுகளைக் கொண்டது. இந்த நிலையில், நகராட்சியின் மாதாந்திரக் கூட்டம், நகர் மன்றத் தலைவர் அய்யம்மாள் தலைமையில் இன்று (ஏப்ரல் 28) நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, நகர் மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை பலமுறை சுட்டிக்காட்டிய பின்பும் நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி நகர் மன்றத் தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதேநேரம், கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்தும், டெண்டர் ஒதுக்கீடுகள் குறித்தும் நகர் மன்ற உறுப்பினர்களிடம் முறையாக கலந்து ஆலோசிக்காமல், தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய இருவரும் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.
மேலும், இதனைக்கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 19 கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து நகர் மன்றத் தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.