திருவண்ணாமலை கிரிவலப் பாதை குபேர லிங்க கோயில் கும்பாபிஷேகம்: ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தரிசனம்! - ரஜினிகாந்த்
Published : Oct 27, 2023, 6:33 PM IST
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் 14 கி.மீ., சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்கங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய குபேர லிங்க கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை சிவாச்சாரியார் வேத மந்திரம் முழங்க, குபேர லிங்கத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு வாய்ந்த மகா கும்பாபிஷேக விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டு மனம் உருகச் சுவாமி தரிசனம் செய்தார். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இந்து மற்றும் அறநிலையத்துறை சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். மேலும் லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். லால் சலாம் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.