செங்கோல் விவகாரம் கட்டுக்கதை அல்ல; புகைப்பட ஆதாரம் இருக்கு: ஆதீனம் அம்பலவான தேசிகர் தகவல்! - sengol story is a lie
சென்னை: டெல்லியில் நடைபெற்ற புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்றுத் தங்கச் செங்கோலைப் பிரதமரிடம் வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம், டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று (ஜூன் 1) சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். அப்போது அடியார்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து ஆதீனத்திற்கு ஆளுயர மாலை அணிவித்தும், தேவார திருவாசகங்களைப் பாடியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஆதீனத்திற்கு மலர் கிரீடம் அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆதீனம் அம்பலவனா தேசிக பரமாச்சர்ய சுவாமிகள், “75 ஆண்டுகளாக அலகாபாத் அருங்காட்சியகத்திலிருந்த செங்கோல், தற்போது நாடாளுமன்றத்தில் பிரதமர் மூலம் நிறுவப்பட்டுள்ளது. செங்கோலுக்குச் சிறப்பாக பூஜை நடைபெற்றது.
அனைத்து ஆதீனங்களும் பங்கேற்றது பெருமைக்குரியது. இறைவனை எப்படி வணங்குவோமோ, அதேப் போன்று செங்கோலின் முன்பாக தரையில் விழுந்து பிரதமர் வணங்கினார். பிரதமர் அவ்வாறு வணங்கியது அருமையான காட்சியாக இருந்தது. செங்கோல் மவுண்ட் பேட்டனிடம் வழங்கப்பட்டது என்பது கட்டுக்கதை கிடையாது. மவுண்ட் பேட்டனிடம் செங்கோல் வழங்கப்பட்டதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் செங்கோல் குறித்து எங்களிடம் நேரில் கேட்டறிந்தனர். அதற்கான புகைப்பட ஆதாரங்கள் எல்லாம் எங்களிடம் உள்ளன. காமராஜர் காலத்தில் தேசிய பாதுகாப்பு நிதி திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜேந்திர பிரசாத் போன்ற தலைவர்கள் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வருகை தந்துள்ளனர்” என தெரிவித்தார்.